காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை கடந்து தனது இறுதி இலக்கான ஸ்ரீநகரை எட்டியுள்ளது.
சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரத்தை கடந்துள்ள இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியல்-தொழில்நுட்ப அறிஞர்கள், திரைத்துறை, விளையாட்டுத்துறை சாதனையாளர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும் ராகுல் காந்தியுடன் தினந்தோறும் யாத்திரையில் பங்கேற்று வந்தனர்.
அத்துடன் ஏராளமான பொதுமக்களும் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகி வந்த இந்த யாத்திரை இன்றுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல்காந்தி. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், கொட்டும் பனிமழைக்கு மத்தியில், இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழாவின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. காஷ்மீர் முன்னாள் முன்னாள் முதல்-மந்திஉமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் உரையாற்றினர். பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்துள்ளது இந்திய ஒற்றுமை பயணம். இந்திய ஒற்றுமை பயணத்தின் இறுதி நாளில் பிரியங்கா காந்தி பங்கேற்று ராகுல்காந்தியை ஆரத்தழுவி வரவேற்றார்.