காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். 136 நாட்களில் கிலோமீட்டர் நடை பயணமாக 14 மாநிலங்களில் உள்ள 76 மக்களவைத் தொகுதிகளுக்கு சென்று நடை பயணத்தை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை மேற்கொண்டனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை சென்றனர். மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் காமராஜர் மாளிகையில் துவங்கிய பாதையாத்திரை பயணம் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயிலாடுதுறை சட்டமன்ற அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கைகளில் காங்கிரஸ் கட்சிக்கொடியை ஏந்தி நடை பயணத்தில் கலந்து கொண்டனர்.