பிரதமர் மோதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், குஜராத் நீதிமன்றம் எம் பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை கண்டித்து இன்று நாகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அபிராமி அம்மன் திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்த பாஜகவை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது
காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கொழுந்து விட்டு எறிந்த உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.