மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்போது யாருக்கு ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதை அறிய பொதுமக்களிடம் புதிதாக கருத்துக்கணிப்பை நடத்தியது. கடந்த 10-ந்தேதி 19-ந்தேதி வரை நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 71 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 7,202 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி இன்னும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார் என்பது தெரியவந்தது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ராகுல் காந்திக்கு பாரத ஒற்றுமை யாத்திரைக்கு பிறகு 15 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து உள்ளதும் தெரியவந்து இருக்கிறது.
43 சதவீத பொதுமக்கள் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி 3- வது முறையாக வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளனர். 38 சதவீதம் பேர் இந்த ஆட்சி வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள். இன்று தேர்தல் நடந்தாலும் பாரதிய ஜனதாவை ஆதரிப்போம் என 40 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியை 29 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.
பாரதிய ஜனதாவுக்கு 2019-ம் ஆண்டு 37 சதவீதம் இருந்தது. இது தற்போது 39 சதவீதமாக அதிகரித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு 19 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. 2019-ம் ஆண்டு யார் பிரதமராக வர வேண்டும்? என நடந்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தற்போது இது 43 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதேசமயம் ராகுல் காந்திக்கு இருந்த ஆதரவு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் பிரமதர் மோடியின் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 25 சதவீதம் பேர் மோடியின் பேச்சுதிறமையை விரும்புவதாகவும், 20 சதவீதம் பேர் அவரது வளர்ச்சி திட்டங்களை ஆதரிப்பதாகவும், 13 சதவீதம் பேர் அவரது கடுமையான உழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் அவரது கவர்ச்சி தங்களை வெகுவாக ஈர்த்து இருப்பதாக 13 சதவீதம் பேரும் அவரது கொள்கை தங்களுக்கு பிடித்து உள்ளதாக 11 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.