மோடி என்ற குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்ககோரி ராகுல் தாக்கல் செய்த மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது.இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதி கீதா கோபி விசாரிப்பதாக இருந்தது. அதன்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பி.எஸ்.சாப்பனேரி நேற்று கோர்ட்டில் ஆஜராகினார். அப்போது வழக்கில் இருந்து விலகியதாக நீதிபதி கீதா கோபி கூறினார். அத்துடன் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பும்படி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது.