காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தனது கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்தார். ராகுல் அவதூறு பேச்சு அப்போது அவர் கர்நாடக மாநிலம் கோலாரில் 2019, ஏப்ரல் 13-ந் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சர்ச்சையானது. அவர், ஊழல் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் மோடியையும் சேர்த்து அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ அப்போது வெளியாகி வைரலானது.
ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இந்து வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா அதிரடியாக தீர்ப்பு கூறினார். மேலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன், தண்டனையை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தியும் வைத்தார்.
2 ஆண்டு தண்டனை தீர்ப்பு வந்த சூட்டோடு சூடாக, மறுநாளிலேயே ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
தீர்ப்பு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி இன்று (திங்கட்கிழமை) சூரத் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நேரில் மேல்முறையீடு செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவரது வக்கீல் கிரிட் பன்வாலா கூறும்போது, “ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக சூரத் செசன்ஸ் கோர்ட்டுக்கு திங்கட்கிழமை (இன்று) பிற்பகல் 3 மணிக்கு வந்து சேருகிறார்” என தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்ய டில்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல் சூரத் புறப்பட்டார் . அவருடன் பிரியங்கா காந்தியும் உடன் சென்றுள்ளார். சூரத் புறப்பட்டு செல்வதற்கு முன்பு ராகுல்காந்தியை சோனியாகாந்தி சந்தித்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று சோனியா சந்தித்தார். இதேபோல பிரியங்காவும் ராகுல்காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ராகுல்காந்தி அப்பீல் செய்வதற்காக கோர்ட்டுக்கு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.