டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர். ஜூன் 4ம் தேதிக்குள் பங்குகளை வாங்குமாறு மே 14ம் தேதி அமித்ஷா கூறியிருந்தார். குறிப்பிட்ட 5 கோடி குடும்பத்தினர் பங்கு சந்தையில் குறிப்பிட்ட நேரத்தில் முதலீடு செய்யுமாறு அமித்ஷா கூறியது ஏன்?. பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக செபி விசாரணை மேற்கொள்ள வேண்டும். பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர். பா.ஜ.,வின் கருத்து திணிப்பால் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன. விலை உயர்ந்ததை பயன்படுத்தி பா.ஜ.,வினர் பணம் சம்பாதித்துள்ளனர். போலியான கருத்து கணிப்புகள் நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். தேர்தல் கருத்து கணிப்புக்கு முன் மே 30,31ம் தேதிகளில் பங்கு சந்தையில் முதலீடுகள் குவிக்கப்பட்டன. தேர்தல் முடிவுக்கு பின் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் பணம் சம்பாதிக்க சதி நடந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும். செபியின் விசாரணைக்கு உள்ளான ஊடக நிறுவனத்தில் அமித்ஷா பங்கு சந்தை பற்றி பேட்டி அளித்தது ஏன்?. பிரதமர் மோடியும் பங்கு சந்தை குறித்து பேசியுள்ளார். பங்கு சந்தை உயர்வு குறித்து மோடி வெளிப்படையாக ஏன் பேச வேண்டும்?. ஜூன் 4ம் தேதி பங்கு சந்தையில் பெரும் ஏற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அறிவுறுத்தியது முறைகேடானது. இவ்வாறு ராகுல் கூறினார்