கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?” என்று விமர்சித்திருந்தார். இந்தக் கேள்வியின் மூலம் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக் கூறி குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவான புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில்தான் சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்தே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நேற்றைய தினம் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி க்கு நீதிமன்றம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமானால், அவர் உடனடியாக தகுதி இழப்புக்கு உள்ளாவார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த 2013-ம் ஆண்டு அவசரச் சட்டம் இயற்ற முயன்றது அப்போதைய காங்கிரஸ் அரசு. பெரும்பாலான கட்சிகள் மற்றும் எம்பிக்கள் அந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ராகுல்காந்தி அந்த அவசரச் சட்ட நகலை கிழித்து “இது முட்டாள்தனமானது” என்று கூறி, அந்த அவசரச் சட்டத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் தடுத்தார். மேலும் நிருபர்களிடம் மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் தவறானது என்பது எனது தனிப்பட்டக் கருத்து. இது ஓர் அரசியல் முடிவு. ஒவ்வொரு கட்சியுமே இதுபோன்று முடிவுகளை எடுக்கின்றன. ஆனால், இதுபோன்ற ஒரு முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என கடுமையாக விமர்சனம் செய்தார். ராகுல்காந்தியின் அந்த விமர்சனம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடதக்கது. எந்தச் சட்டம் மாற்றப்படக் கூடாது என ராகுல்காந்தி கூறினாரோ.. அந்த சட்டப்பிரிவின் கீழ் அவரே சிக்கி எம்பி பதவியை இழந்துள்ளார்,,
2013ம் ஆண்டு சட்ட திருத்த மசோதாவை கிழித்து.. இன்றையதினம் சிக்கலில் மாட்டிக்கொண்ட ராகுல்…
- by Authour

Tags:ராகுல்காந்தி