பிஹார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிஹாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு நடந்து சென்றார்.
பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார். முன்னதாக இந்த பேரணி குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி, “வேலையின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, அரசு வேலைகள் குறைப்பு, உங்களுக்குப் பயனளிக்காத தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்.
பீகார் இளைஞர்களின் உணர்ச்சிகளை உலகம் காணவும், மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் வெள்ளை டி-சர்ட் அணிந்து எங்களுடன் சேருங்கள். பீகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பீகாரை உருவாக்க விரும்புகிறோம்.
பீகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கமாகும். இந்தப் பயணம் பீகாரின் போராட்டத்தின் குரலும் நம்பிக்கையும் ஆகும். பல ஆண்டுகளாக அநீதியை அனுபவித்து வரும் மாநில இளைஞர்களுக்கு ‘நீதிக்கான உரிமை’ கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அவர் (ராகுல் காந்தி) பேரணி செல்வதற்குப் பதிலாகப் பிராயச்சித்தம் தேட வேண்டும். காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி செய்து வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பியது, ஆனால் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றார்.