தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதயவிழா பெரிய கோயிலில் நேற்று தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 1038வது சதயவிழாவை சிறப்பிக்கும் வகையில் இரவில் 1038 கலைஞர்களின் பரதநாட்டியம் கோயிலில் நடந்தது. நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. ஆனால் நாட்டியம் நடந்த இடத்தில் இன்னும் அதிகமான விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தால் நடனம் ஜொலித்திருக்கும். அல்லது மாலையிலேயே நடனத்தை நடத்தியிருக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். 1038 கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடிய காட்சி கண்களுக்கு விருந்தளித்தது.
இன்று காலை கோயிலில் இருந்து திருமுறைப்பாடல்கள் பாடியபடி 4 வீதிகளிலும் வீதியுலா வந்தனர். அவர்கள் கோயிலை அடைந்ததும் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தீபக் ஜேக்கப், எஸ்.பி. ஆஷிஸ் ராவத், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சதயவிழாக்குழு தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, கோயில் இணை ஆணையர் கவிதா, கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து கோயிலில் பெருவுடையாருக்கு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 48 வகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இரவில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவற்றுடன் விழா நிறைவு பெறுகிறது.