சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் மற்றும் லடாக் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை இருவரும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த 1963-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதியன்று பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1989-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஆர். மகாதேவன், தமிழகத்தில் உள்ள பாரம்பரியமிக்க, பழமையான கோயில்கள், புராதன சின்னங்கள், கோயில் நகைகள் பாதுகாப்பு, சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் 75 கட்டளைகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்கிறார்.