திருச்சி வருவாய் மாவட்டத்தில் , திருச்சி புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு, மாநகர் என 3 மாவட்டங்களாக அதிமுக பிரிக்கப்பட்டு உள்ளன. நிர்வாக வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாநகர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 35 வார்டுகள் இடம் பெற்றுள்ளது.
இந்த மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் சீனிவாசன். இவர் அதிமுக ஆட்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். அமமுக கட்சியிலும் பணியாற்றியவர். அங்கிருந்து அதிமுகவுக்கு வந்து மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
இந்த மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கும், அவரது கட்டுப்பாட்டில் உள்ள35 வார்டு செயலாளர்களுக்கும் எப்போதும் முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் தான் ஏதாவது கூட்டங்கள் நடத்தினால், மேலிட பார்வையாளர் ஒருவர் வந்து கலந்து கொள்வார்.
ஆனாலும் மாவட்ட செயலாளருக்கும், மற்ற நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே இருந்து வந்த நிலையில் மோதல் முற்றிய நிலையில் நேற்று 35 வார்டு செயலாளர்களும், சேலம் சென்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியை சந்தித்து மாவட்ட செயலாளர் சீனிவாசனை மாற்ற வேண்டும் என முறையிட்டனர்.
மா. செ. சீனிவாசன் குறித்து தாங்கள் கூறும் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற அனைவரும் கோரிக்கை வைத்தனர். அதற்கு எடப்பாடி அத்தனை பேரின் கோரிக்கைகளையும் தனித்தனியாக கேட்க நேரமில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்கள் பிரச்னை என்ன என்பதை ஒரு மனுவாக எழுதி கொடுங்கள் என கூறினார்.
அதைத்தொடர்ந்து அனைவரும் ஒரு மனு எழுதினர். அதில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமமுகவில் இருந்து வந்தவர். அவர் அமுமுகவில் இருந்து வந்தவர்களுடன் தான் உறவில் இருக்கிறார். அவர்களுக்கு தான் இப்போது அதிமுகவிலும் பதவி கொடுக்கிறார். உண்மையான விசுவாசிகளை மதிப்பதில்லை. நாங்கள் சொல்வதை கேட்பதில்லை. கட்சியின் நலனுக்காக எந்த நடவடிக்கையும் அவர் எடுப்பதில்லை. எனவே அவரை மாற்ற வேண்டும் , அப்போது தான் திருச்சியில் அதிமுக காப்பாற்றப்படும் என அதில் எழுதப்பட்டு இருந்தது.
இந்த மனுவை எடப்பாடியிடம் கொடுத்த வார்டு செயலாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எடப்பாடி காலில் விழுந்து சீனிவாசனை மாற்றுங்கள் அப்போது தான் திருச்சியில் அதிமுக வளரும் என்றனர்.
மனுவை பெற்றுக்கொண்ட எடப்பாடி, மற்ற நிர்வாகிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு வார்டு செயலாளர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாக அனைத்து வார்டு செயலாளர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதால், மாவட்ட செயலாளர் சீனிவாசனின் பதவி ஆட்டம் கண்டுள்ளதாக திருச்சி அதிமுகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.