திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார் இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 13 முறை இயக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்து விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்த கருத்து, அவரது கருத்து தனிப்பட்ட கருத்து, முதிர்ச்சியற்ற கருத்து என்று அவர்களது கட்சி நிர்வாகிகளே தெரிவித்து இருக்கின்றனர். அதனால், இது குறித்து விரிவாக பேச விரும்பவில்லை.
கும்பகோணத்தை கோட்ட தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக, திருச்சி பெரிய நகரமாக இருக்கிறது. எனவே, திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க, அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை வைக்கப்படும். இதுகுறித்து ஏற்கனவே திருச்சி மூத்த அமைச்சர் கேஎன்.நேரு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறார்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. திமுக அமைச்சர் முத்துசாமியும் இதை சொல்லி இருக்கிறார். எனவே, இதில் அரசியல் கலக்கக்கூடாது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார் அதையே நாங்களும் சொல்கிறோம்.
தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும். வருகிற 27ம் தேதி நமது முதல்வர் டில்லி செல்கிறார். அப்போது பிரதமரை சந்தித்து கல்வித்துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்க வேண்டியது குறித்து பேசுவார். ஆசிரியர்கள் இந்த நேரத்தில் முதல்வரின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக போராட்டத்தை கைவிட்டனர். அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கலெக்டர் பிரதீப் குமார், போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் முத்து கிருஷணன், துணை மேலாளர் சாமிநாதன், மண்டல குழு தலைநவர் மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.