வங்க கடலில் உருவாகி உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இன்று காலையும் சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னவெள்ளக்காடாககாட்சிஅளிக்கிறது.மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ள நிலையில் ஏரிக்கு தொடர்ந்து வினாடிக்கு 3898 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. எனவே வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்படுகிறது.
இதுபோல புழல் ஏரிக்கும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த ஏரியும் நிரம்பி உள்ளதால் ஏரியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையில் வரும் 4ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாலும், வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் தமிழகத்தில் தான் தரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் பாதுகாப்பு கருதி ஏரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.