புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா,நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலா கலமாக தொடங்கியது.
உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராய் மலையப்பர், விஸ்வக்சேனர் ஆகியோர் நேற்று மாலை தங்க கொடிமரம் வரை கொண்டு வரப்பட்டனர். அப்போது மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, கருடன் சின்னம் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தானஅதிகாரிகள் பங்கேற்றனர். நேற்று மாலை திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பின்னர், இரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதி சமேதராக ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரத்தை தலையின்மீது சுமந்து வந்தபடி கோயில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தார்.
பிரம்மோற்சவ விழாவின், முதல் நாளான நேற்றிரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவரான மலையப்பர் ஆதிசேஷனாக கருதப்படும், பெரிய சேஷ வாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகன சேவையின் முன், காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, அவர்களுக்கு பின் ஜீயர் கோஷ்டியினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை பாடிய படி செல்ல, இவர்களை பின் தொடர்ந்து தமிழகம் உட்பட 16 மாநிலங்களின் நடன கலைஞர்கள் நடனமாடிய படி செல்ல, உற்சவ மூர்த்திகளின் மாட வீதி உலா மிக சிறப்பாக நடந்தது.