Skip to content

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிசேகம், ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தஞ்சை  புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைப்பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களுள் இந்த கோயிலும் ஒன்று.

இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மும்முரமாக நடந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று குடமுழுக்கு நடந்தது.

கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.  குடமுழுக்கையொட்டி புன்னைல்லூர் மாரியம்மன்கோயிலில் உள்ள கோபுரங்களில் கலசங்கள் பொருத்தும் பணி நடந்தது. இதில் அம்மன் கோபுரத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கலசம் பொருத்தப்பட்டது. இந்த கலசம் புதிதாக செய்யப்பட்டு பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தது. இதே போன்று துர்க்கை அம்மன், பேச்சியம்மன் கோபுரத்திலும் புதிதாக கலசங்கள் பொருத்தப்பட்டன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் பாலீஷ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்பட்டன.

இதேபோல் கோயிலில் உள்ள கொடிமரத்திலும் செப்புக்கவசம் பொருத்தப்ப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அப்போது வடவாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்காக பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளையில் யாகசாலை பூஜைகள் நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 6 மணிக்கு 6ம் கால யாகசாலை தொடங்கியது. பின்னர் பூர்ணாஹீதி, தீபாராதனை, யாத்ராதானம் ஆகியவை நிறைவடைந்து யாகசாலை மண்டபத்தில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன், மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் சென்றடைந்தது. அப்போது சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் வேதபாராயணம், திருமுறைகளை பாடி குடமுழுக்கை நடத்தினர். அப்போது வானில் கருடன் கோயிலை சுற்றி வட்டமிட்டது. அதேநேரத்தில் கும்பாபிபேஷகத்தை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷம் விண்ணை அதிர செய்தது. பின்னர் மகா தீபாராதனையும், அருட் பிரசாதமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி 800க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால்  வாகன நெரிசல் அதிக அளவில் ஏற்பட்டது.

 

error: Content is protected !!