தஞ்சை அருகே புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். இங்குள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு புடவை சாத்துவது வழக்கம். இவ்வாறு வரும் புடவைகளை ஏலத்தில் விடுவது வழக்கம்.
அந்த வகையில் பொதுமக்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள், தஞ்சை பெரிய கோவிலில் பொது ஏலம் விடப்பட்டன. தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நடராஜர் மண்டபத்தில், பட்டுப்புடவை, பாலியஸ்டர் புடவை, நூல் புடவை, சின்னாளப்பட்டு, காட்டன் புடவைகள் ஆகியவை பொது ஏலம் விடப்பட்டது.
செயல் அலுவலர் மாதவன் மேற்பார்வையில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஜனனி முன்னிலையில் இந்த ஏலம் நடந்தது. அரண்மனை தேவஸ்தானம் சார்பில் மகாதேவராவ், மங்கையர்கரசி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஏலம் நாளையும் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.