பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்.. மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தற்போதைய தலைவர், அம்ரித் பால் சிங் ( 30) மீண்டும் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை துவக்கியுள்ளார். கடந்த 6, 7 மாதங்களாக இவரின் செயல்பாடுகள் நான் தான் அடுத்த பிந்தரன்வாலே என்ற எண்ணத்தில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டு வலுத்து வருகிறது. கடந்த மாதத்தில் இந்த அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி ஒருவர், ஒரு வழக்கில் அமிர்தசரஸ் புறநகரான அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அம்ரித்பால் சிங்கும், அவரது ஆதரவாளர்களும் போருக்குப் போவது போல கைகளில் வாள்களையும், துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு சென்று தடுப்பு வேலிகளையெல்லாம் தகர்த்தெறிந்து அந்த போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்து தங்கள் கூட்டாளியை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். பெரும் பதற்றமான சூழலைத் தவிக்க அம்ரித்பால் சிங் கூட்டாளியை போலீஸ் விடுவித்தது. . இந்த நிலையில் அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மாநில அரசு முடிவு எடுத்து அதற்கான அதிரடி நடவடிக்கையை சனிக்கிழமை தொடங்கியது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் ஆலோசித்து மத்திய படைகளை பாதுகாப்புக்காக பெற்றுள்ளதைத் தொடர்ந்தே மாநில அரசு அம்ரித் பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை தீவிர படுத்தியுள்ளதன் விளைவாக 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவருடைய நிதி விவகாரங்களை கையாள்கிற கூட்டாளி தல்ஜீத் சிங் கல்சியும் கைது செய்யப்பட்டு விட்டார் என தகவல்கள் கூறுகின்றன. ஜலந்தரில் அம்ரித்பால் சிங் வந்த காரை போலீசார் வழிமறித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பித்து விட்டார். அம்ரித் பால் சிங்கைப் பிடிக்க மேற்கொள்ளும் நடவடிக்கை பற்றி ஜலந்தர் போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சஹல் கூறியதாவது:- அவர் தற்போது ஓட்டம் பிடித்துள்ளார். நாங்கள் அவரைப் பிடிக்க வலை வீசி உள்ளோம். விரைவில் அவரை கைது செய்து விடுவோம். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 7 பேரை கைது செய்துள்ளோம். அம்ரித்பால் சிங்கை போலீஸ் படை துரத்தியது. அவரது வாகனத்தைத் தொடர்ந்து 25 கி.மீ. தொலைவுக்கு துரத்தினோம். அவரது வாகனம் முன்னணியில் இருந்தது. அதை சாதகமாக அவர் பயன்படுத்திக்கொண்டு, குறுகலான தெருக்களில் புகுந்தும், வாகனத்தை மாற்றிக்கொண்டும் தப்பினார். அவரது 2 வாகனங்களை நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம். நாங்கள் அதிரடி படையினருடன் இணைந்து ஜலந்தரில் கொடி அணிவகுப்பு நடத்தினோம். சமூக நல்லிணக்கத்தை கெடுக்க அனுமதிக்க முடியாது. குற்றம் செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். அம்ரித் பால் சிங்கை மடக்கிப்பிடித்து விட வேண்டும் என்ற தீவிர போலீஸ் நடவடிக்கைக்கு எந்த இடையூறும் வந்து விடக்கூடாது என்பதற்காக மாநிலத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இணையதளச்சேவை, குறுந்தகவல் சேவை ஆகியவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. மாநிலமெங்கும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்காக நடத்தப்படுகிற தேடுதல் வேட்டையில் இதுவரையில் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவை சிக்கி உள்ளன.