ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஜனவரி 18-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதற்கிடையே சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது . ஸ்கேன் பரிசோதனை முடிவு தொடர்பாக பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவினர் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக முறைப்படி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நாளை (12-ம் தேதி) நடைபெற உள்ள கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்கக்கூடும் என நம்பப்பட்ட நிலையில், அவர் அவசரமாக பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்துக்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக்குழுவினர் இன்று அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ராணா சேர்க்கப்படலாம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பாதியில் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்பு இருந்தால், 15 பேர் கொண்ட இந்திய அணியில் அவர் தொடரக்கூடும். ஒருவேளை அதன் பிறகும் பும்ரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் ஐசிசி-யின் தொழில் நுட்ப குழுவின் ஒப்புதலை பெற்று மாற்று வீரரரை அணியில் சேர்க்கலாம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 23-ம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2-ம் தேதி நியூசிலாந்துடனும் பலப்பரீட்சை நடத்துகிறது