பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தலைவர், அரசு சார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திடமுதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
வாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன்; லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான்; வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேல்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ண வெங்கடரமணன்; மும்பையில் வசிக்கும் மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.
இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.