விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி(71), இவர் விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ரத்த வாந்தி எடுத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்தும் சிறப்பு மருத்துவ குழுவினர் விழுப்புரம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணி அளவில் புகழேந்தி உயிர் பிரிந்து விட்டது. புகழேந்தி ஏற்கனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழேந்தி சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் திருவாதி என்ற கிராமத்ைத சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். திமுகவின் ஆரம்ப கால தொண்டர். கோலியனூர் ஒன்றித் தலைவராக இருந்தார். 2019 ல் விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் அங்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
புகழேந்தி மறைவு செய்தி அறிந்ததும் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அவர் இறுதி அஞ்சலி செலுத்த விழுப்புரம் விரைகிறார். புகழேந்தி மறைவுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.