சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக கூறி, புகார் அளிக்க ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகம் வந்திருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டி: நான் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுகிறார்கள். இதை யார் செய்தது என்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. எனவே டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கிறேன்.
நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. ஊடகங்களும் மற்றவர்களும் சேர்ந்து பாஜகவுக்கு ஜால்ரா அடிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள். நான் தெளிவாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக சொல்கிறேன். பாஜக மீது மரியாதைதான் உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் ஏற்கனவே கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளாத இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை அண்ணாமலை பயன்படுத்தியிருக்கிறார். அண்ணாமலை இப்படி கூறியது சட்டப்படி குற்றம் இல்லையா. பாஜக எந்த காலத்திலும் எங்களை இயக்க முடியாது. பாஜக வேட்பாளரை நிறுத்த சொல்லவில்லை. வாபஸ் பெறவும் சொல்லவில்லை. அண்ணாமலை அப்படி ஒரு அறிவுறுத்தல் விடுக்கவே இல்லை. அண்ணாமலை பேச்சை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம் என்றார்.