எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்து அதிமுகவில் அவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் பேசும்படியாகவோ, பேசுபொருளாகவோ இருந்ததில்லை. இவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவரும் ஒன்று தான் என்ற அளவுக்கு தான் கருதப்பட்டனர். ஆனால் இன்று எடப்பாடி காலத்து அதிமுகவில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற அளவில் மாவட்டத்துக்கு ஒருவர், மண்டலத்துக்கு ஒருவர் என குட்டி ராஜாங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களில் கோவை வேலுமணி, குமாரபாளையம் தங்கமணி, விருதுநகர் கே.டி. ராஜேந்திரபாலாஜி , மதுரை செல்லூர் ராஜூ ஆகியோர் ஏற்கனவே இது எங்க கோட்டை என தங்கள் பகுதிக்குள் ராஜாங்கம் செய்து வருகிறார்கள்.
புதிதாக இப்போது செங்கோட்டையனும் அந்த லிஸ்டில் சேர்ந்துள்ள நிலையில், புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தன் பங்குக்கு தன்னையும் ஒரு மண்டல தளபதி போல காட்டிக்கொண்டிருக்கிறார்.
இதற்காக இவர் கடந்த 29, 30ம் தேதிகளில் புதுக்கோட்டை பழைய டிவிஎஸ் கார்னரில் அகில இந்திய மகளிர் கபடி போட்டி நடத்தினார். ஜெயலலிதா பெயரிலான டிராபிக்கான இந்த கபடி போட்டியை ஜெயலலிதா பேரவை சார்பில் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக கருப்பையா செயல்படுகிறார். ஆனாலும் இந்த போட்டியை நடத்தியது எல்லாம் விஜயபாஸ்கர்தான். இதற்காக எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் ஆகியோருக்கான மிகப்பெரிய கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடிக்கு இணையாக விஜயபாஸ்கருக்கும் கட்அவுட் வைத்திருந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களுக்கும் கட்அவுட் வைத்து அசத்திவிட்டார்.
நேற்று இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. இதற்காக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர், திருவாரூர் மாவட்ட செயலாளர், தஞ்சை மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை எல்லாம் அழைத்து விழாவை நடத்தி உள்ளார்.
இந்த போட்டி மற்றும் ஏற்பாடுகளை பார்த்து தன்னை அதிமுகவில் பெரிய ஆள் என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை மனதில் வைத்து ஏற்பாடுகள் செய்தார் என இந்த விழாவுக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து உள்ளனர்.
அம்மா காலத்தில இப்படி செய்ய முடியுமா, பொதுச்செயலாளருக்கு நிகரா கட்அவுட் வைத்து பக்கத்து மாவட்ட செயலாளர்களை எல்லாம் அழைத்து விழா நடத்த இவர் எடப்பாடியிடம் அனுமதி பெற்றாரா என்றும் கேட்கிறார்கள்.
அதிமுகவுக்கு இப்போது உள்ள நெருக்கடிகளை மனதில் வைத்துக்கொண்டு, ஊருக்கு ஊர் புதிய நாட்டாமைகள் கிளம்பி இருக்காங்க என்று கட்சியின் தொண்டர்கள் வேதனையுடன் புலம்புகின்றனர்.