புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸ்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக திருச்சி டி.ஐ.ஜி. சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி, டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் ஆகிய 4 உறுப்பினர்களும் நேரில் ஆய்வு செய்தனர். இதுவரையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த உத்தரவில், விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட நபர்களை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்வதற்காகவும் வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.