புதுக்கோட்டை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அந்த ஆட்டத்தின் உச்சம் நேற்று நூற்றுகணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் முன்னிலையில் ஒரு மூத்த அமைச்சர், மாவட்ட செயலாளர் காலைத்தொட்டு கும்பிடும் அளவுக்கு விபரீதமாகி விட்டது. இந்த காட்சி நேற்று சில டிவிக்களில் ஒளிபரப்பாகியது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு, தெற்கு என 2 திமுக மாவட்டங்கள் உள்ளது. வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் செல்லபாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் ரகுபதி.
தெற்கு மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், வடக்கு மாவட்டத்தில் புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வகோட்டை தொகுதிகளும் இடம் பெற்றுள்ளது.
ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அமைச்சர் மெய்யநாதன், அறந்தாங்கியில் குடியிருக்கிறார். இவரது தொகுதியும், இவர் குடியிருக்கும் அறந்தாங்கியும், தெற்கு மாவட்டத்திற்குள் வருகிறது. எனவே அவர் தெற்கு மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டிக்கு தயாரானார். மேலிடம் தலையிட்டு அவரை போட்டியில் இருந்து விலகும்படி செய்தது. இதனால் அமைச்சர் மெய்யநாதனுக்கு, அமைச்சர் ரகுபதி மீது தீராத கோபம்.
விழாக்களில் சிாித்து பேசிக்கொள்வார்கள். ஆனால் உள்ளூற நிறுபூத்த நெருப்பாக இருவருக்கும் பகை புகைந்து கொண்டு தான் இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், முழு வருவாய் மாவட்டமும், தனது அதிகாரத்திற்கு உட்பட்டது போல தனது ஆளுகையை தென் மாவட்டத்துக்கும் விரித்து கொள்வார். தொண்டர்கள் மத்தியில் பேசும்போது, அவ்வப்போது ரகுபதியை காரசாரமாக , அசிங்கமாக திட்டி தீர்க்கும் வேலையையும் செய்கிறார் என திமுக தொண்டர்களே மனம் வெதும்பி கூறுகிறார்கள். இத்தனைக்கும் ரகுபதி ஒரு சீனியர் அமைச்சர்.
எந்த குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல், பணி செய்து வருகிறார். அதே நேரத்தில் தற்போது தனது துறை மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்று மனம் திறந்து கூறி வருகிறார்.
இதை சாக்காக வைத்துக்கொண்டு அமைச்சர் மெய்யநாதனும், மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனும் சேர்ந்து கொண்டு ரகுபதியை டார்கெட் வைத்து, டார்ச்சர் செய்கிறார்களாம்.
இந்த நிலையில் தான் நேற்று அண்ணா பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ரகுபதி காலை 10 மணிக்கு செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக செல்ல பாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக அண்ணா சிலைக்கு வந்து கொண்டிருந்தனர். காலை 9.20மணிக்கே அண்ணா சிலைக்கு வந்து விட்டார் அமைச்சர் ரகுபதி. 9.30 மணி வரை ஊர்வலத்தினா் வரவில்லை. 10 மணிக்கு விழாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்த அமைச்சர் ரகுபதி டென்ஷன் ஆகி மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனை போனில் தொடர்பு கொண்டு, 10 மணிக்கு விழா தொடங்க வேண்டும்.
நீங்கள் இப்படி வந்தால் , நான் எப்படி போக முடியும். மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா, முதல்வரின் முக்கியமான விழா, அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், சீக்கிரம் வாங்க, இல்லாவிட்டால் நான் மாலை அணிவித்து விட்டு நான் மட்டும் போய்விடுவேன் என சத்தமாக பேசிவிட்டு போனை கட் செய்து விட்டார். பின்னர் 9.45 மணிக்கு ஊர்வலத்தினர் மாவட்ட செல்லபாண்டியன் தலைமையில் வந்தனர்.
அண்ணா சிலையின் பீடத்தில் அமைச்சர் ரகுபதி நின்று கொண்டிருந்தார். ஊர்வலத்தில் வந்த மாவட்ட செயலாளரை பார்த்து ரகுபதி கும்பிட்டார். திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனின் காலில் விழப்பாய்ந்தார். அருகில் நின்றிருந்த திமுக நிர்வாகி சந்திரசேகரன் அமைச்சரை தாங்கி பிடித்துக்கொண்டதால் அவர் காலில் விழவில்லை. அதே நேரம் செல்லபாண்டியன் காலைத்தொட்டு கும்பிட்டார்.
மாவட்ட செயலாளர் காலை அமைச்சர் ஏன் தொட்டுக்கும்பிட்டார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவும் இல்லை. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததும் ரகுபதியும், மாவட்ட செயலாளரும் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் விழாவுக்கு சென்றனர். அங்கும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை.
உரலுக்கு ஒருபக்கம் அடி. மத்தளத்துக்கு 2 பக்கமும் அடி என்பது போல பலமுனை தாக்குதலால் மனம் நொந்து போன் அமைக்சர் ரகுபதி, மாவட்ட செயலாளர் காலில் விழுந்து விட்டார் என திமுக முன்னணி நிர்வாகிகள் பேசிக்கொண்டனர். ஒரு பொது நிகழ்ச்சியில் அமைச்சர் , மாவட்ட செயலாளர் காலில் விழுந்தது ஏன்? என்பது குறித்து திமுக மேலிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் விரைவில் மேலிடத்தில் இருந்து அழைப்பு வரும் என தெரிகிறது.