புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பார்வைத்திறன் குறையுடைய 20 மாணவர்களை விழாக்குழுவினர் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் வடிவேலன் மற்றும் பணியாளர்கள் வந்திருந்தனர்.
புத்தகத் திருவிழாவிற்கு வந்த அவர்களை இதரப் பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், ஜீவி, எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், ஸ்டாலின் சரவணன், பவுனம்மாள், ஆசிரியை கீதா உள்ளிட்டோரும் அவர்களை வரவேற்று அழைத்து வந்தனர்.
புத்தக அரங்கத்திற்குள் சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் புத்தகங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் அரங்கிற்கு வந்த அவர்கள் பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வாங்கி பரிசளித்தனர்.