புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.07.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கு இயங்கி வரும் மனநல காப்பகத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு சிகிச்சை பெற்றுவந்த 59 நபர்களுக்கு சரிவர சிகிச்சை, உணவு, இருப்பிடம், சுகாதாரம் வழங்காததை கண்டு மருத்துவ சேவை வழங்கி வரும் ரெனேசன்ஸ் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்த நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை வழங்காததை ஆய்வு செய்ய தவறிய இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராமுவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் அன்னவாசல் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சரவணனை பணி மாறுதல் செய்யவும் உத்தரவிட்டார். மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில் இயக்குநர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மூலம் 59 நபர்களையும் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.