வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இலங்கை கடற்படையினர் தவிர இலங்கையின் கடற்கொள்ளையர்களும் அடிக்கடி வந்து தமிழக மீனவர்களை தாக்கி வலை, படகுகளை சேதம் செய்து கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மேலும் ஒரு கைது சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறது இலங்கை கடற்படை. நேற்று காலை ஜெகதா பட்டினம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து 79 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், சின்னையன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.
காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.