இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(drdo), டில்லியை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 30ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த அமைப்பில் விஞ்ஞானிகள் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு தான் இந்தியாவின் பாதுகாப்புக்கான முழு உத்தரவாதம். இந்த அமைப்பின் விஞ்ஞானிகள் அளிக்கும் ஆலோசனையின் பேரிலேயே நம் நாட்டின் அதிநவீன ஆயுதங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குறிச்சிப்பட்டியை சேர்ந்த ஒரு விவசாயியின் மகன், டிஎம்இ படித்த ஒரு பட்டய பொறியாளர் இந்தியாவின் அதிநவீன ராணுவ தளவாடங்களை அப்படியே காகிதத்தில் உருவாக்குகிறார். அவரது பெயர் ஆனந்தராஜ்(30), சில காலம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி இவர் பின்னர் அந்த வேலையையும் விட்டு விட்டார்.
தான் பாதுகாப்புத்துறையில் விஞ்ஞானியாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். தற்போது இந்தியாவின் ரபேல் விமானம், தேஜஸ்விமானம், போா்க்கப்பல், ஹெலிகாப்டர்கள், ராக்கெட்கள், ஜேசிபி, கார்கள் போன்றவற்றை தத்ரூபமாக காகிதத்தில் வடிவமைக்கிறார். பாலிடெக்னிக்கில் படிக்கும்போது இவற்றை உருவாக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார்.
வேலை வெட்டி இல்லாமல் இப்படி காகித்தை வெட்டி வீட்டை குப்பையாக்குகிறாயே என்ற பெற்றோரின் பேச்சுகளுக்கு மத்தியில் ஆனந்தராஜ், இவற்றை ஆனந்தமாக உருவாக்குகிறார். அவ்வப்போது இவற்றை பள்ளி, கல்லூரிகளில் காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனால் புதுகை மாவட்டத்தின் கல்வித்துறையில் ஆனந்தராஜை தெரியாதவர்கள் இல்லை.
பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு தேவையான அறிவியல் உபகரணங்களையும் இவர் தயாரித்து கொடுக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் எந்த அறிவியல் கண்காட்சியும் இவரது தயாரிப்புகள் இல்லாமல் நடைபெறுவது இல்லை. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான குத்சியாகாந்தியும் இவரிடம் பீரங்கி, வேற்றுகிரகவாசி, ஏவுகணை ஏவும் வாகனம் போன்றவற்றை செய்து வாங்கி உள்ளார்.
இவரது தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சியை பார்த்த சந்திராயன் விஞஞானி மயில்சாமி அண்ணாதுரை, மற்றும் புதுகை கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் ஆனந்தராஜை பாராட்டி உள்ளனர். பல உலக சாதனை புத்தகங்களிலும் இவர் இடம் பிடித்துள்ளார்
.
இத்தனை திறமைகள் இருந்தும் ஆனந்தராஜ் ஒரு நிரந்தர வேலையின்றி இருக்கிறார். தமிழ்நாடு அரசு இவருக்கு கைத்தொழில் ஆசிரியர் பணி வழங்கினால் இவரது வாழ்க்கை மட்டுமல்ல, அவரது அறிவியல் திறனும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படும். எரியும் ஒரு மெழுகுவர்த்தியால் தான் எத்தனையோ விளக்குகளை ஏற்றமுடியும் என்பார்கள். அதுபோல இந்த ஆனந்தராஜால் எத்தனையோ கைத்தொழில் திறமைசாலிகளை உருவாக்க முடியும். அவரை பயன்படுத்துவது அரசின் கடமை.