புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18), மகள் பவித்ரா (16).
மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த பவித்ரா, பெற்றோர் கண்டித்தும் மொபைல் போனில் மூழ்கி கிடந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவர், மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்த போது, தங்கையிடம் இருந்த போனை பறித்து, துாங்க செல்லுமாறு மணிகண்டன் அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், போனை திருப்பிக் கேட்டு சண்டையிட்டதால், மணிகண்டன் தரையில் வீசி உடைத்துள்ளார். மனமுடைந்த பவித்ரா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற மணிகண்டனும் குதித்தார். நீச்சல் தெரியாததால் இருவரும் மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்த நவல்பட்டு தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி பவித்ரா, மணிகண்டன் இருவரின் சடலங்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.