சொத்து தகராறில் அண்ணியை கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (வயது 42), ராயப்பன் (38) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்து தங்களது பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டனர்.
ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சேவியருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றும் குழந்தை இல்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
இதனால் ஆரோக்கியமேரிக்கும், ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது உனக்கு தான் குழந்தை இல்லையே, எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்த நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய். அதனால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று அவரை ராயப்பன் அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி தனது நெல் வயலில் இருந்த மயில்களை விரட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது மாலை 6 மணியளவில் ஆரோக்கியமேரியின் அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து செல்போனில் பேசியுள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் அவர் தனது தங்கைக்கு போன் செய்யும்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. பலமுறை முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டின் அருகே உள்ளவர்களுக்கு போன் செய்து வயலுக்கு சென்று தேடி பார்க்க சொல்லி உள்ளார். பின்னர் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. இதனால் சந்தேகமடைந்த சகாயராஜ் அவரது உறவினருடன் கருங்குளத்தில் இருந்து புறப்பட்டு ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, மரம், வயல்களில் தேடிப்பார்த்தும் ஆரோக்கியமேரி கிடைக்கவில்லை. இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பாலாஜி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் விராலிமலை தாசில்தார் கருப்பையா முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்குழாய் கிணற்றை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு உடல் இருந்தது தெரியவந்தது. பின்னர் உடலை போலீசார் குழியில் இருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை, கொழுந்தன் ராயப்பன் அடித்துக்கொலை செய்து உடலை அவரது டிராக்டரில் வைத்து எடுத்து சென்றார். பின்னர் அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள காட்டுப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் சொருகி புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த ராயப்பனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.