புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2011ம் ஆண்டுவரை பதவியில் இருந்தனர். பிறகு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் கிடப்பில் போட்டனர். 11 ஆண்டுகளுக்கு பின் 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு திட்டமிட்டது. இத்தேர்தல் நடத்துவதற்காக கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்), கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபாட் ஆகியவை புதுவைக்கு வரவழைக்கப்பட்டது. இவைகள் பத்திரமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டது. இவிஎம் பாதுகாப்பிற்காக 24 மணிநேரமும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், ‘புதுச்சேரியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு முறையாக இட ஒதுக்கீடு வழங்கவில்லை. குளறுபடி உள்ளது. எனவே, இதை முறைப்படுத்திதான் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை பொறுத்தே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக அம்மாநிலத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட், கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவை தேவைப்படுகிறது. ஆகையால் அந்த மாநிலங்களில் இருந்து புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று மீண்டும் கர்நாடகா 1000 (வாக்குப்பதிவு இயந்திரங்கள்), தெலங்கானாவுக்கு (2000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.