புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் லடாக் மற்றம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் நிதி ஒதுக்கீடு அளிக்க தாங்கள் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்காக கேட்டுப் பெற வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.ரேஷன் கடைகளைத் திறந்து பொருட்கள் வழங்கவேண்டும். .
அட்டவணை இனத்தவருக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 1964-ம் ஆண்டு என்பதை மாற்றம் செய்து ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று 2001-ம் ஆண்டை நிர்ணயம் செய்ய வேண்டும். சாதி சான்றிதழ் பெறும்போது தந்தை வழி என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தாயின் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.