இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட்டில் கூறப்பட்ட சிறப்பு அம்சங்கள் வருமாறு:- இந்த ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும். 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும்.
புதுவையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம், ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும். காரைக்கால் அக்கரை வட்டத்தில் நவீன சிறைச்சாலை, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டுவரப்படும். எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, புதுவையில் உள்ள கோவில்களில் ஆவணங்கள், சொத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை மின்னனு மையமாக்கப்படும். அதனை பொதுமக்கள் பார்வையிடும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படும். புதுவையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.300 கியாஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படும். புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை தேசிய வங்கியில் செலுத்தப்படும்.
தொற்று நோயை கண்டறிய ஆய்வகம் அமைக்கப்படும். 50 புதிய மின்சார பஸ்கள் இயக்கப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் சுற்றுலா நகரம் ஏற்படுத்தப்படும். அட்டவணை இனத்து பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.