புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியை சேர்ந்தவர் நாராயணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 9). இவள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2-ந்தேதி மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாணவி ஆர்த்தி திடீரென மாயமானாள். ஆர்த்தியை அவளது பெற்றோர் அக்கம் பக்கத்து வீடுகள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒரு கேமரா பதிவில் ஆர்த்தி மட்டுமே தனியாக அப்பகுதியில் நடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் மாணவியை பற்றிய எந்த துப்பும் கிடைக்காததால் அவளது கதி என்ன? என்பது தெரியாமல் பெற்றோரும், உறவினர்களும் பதற்றமடைந்தனர்.
மாயமான மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் மாயமான மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடினார்கள். அப்போது வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் ஆர்த்தியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மாணவி ஆர்த்தியின் உடலை சாக்கடையில் இருந்து வெளியே மீட்டனர். இறந்து 3 நாட்கள் ஆனதால் அழுகி துர்நாற்றம் வீசியது. சம்பவத்தன்று தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த மாணவியை, கும்பல் நோட்டமிட்டு மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று கை, காலை கட்டி கொலை செய்துள்ளனர். அதை மறைக்க வேட்டியால் உடலை சுற்றி கட்டி, சாக்கடை கால்வாயில் வீசி இருக்கலாம் என தெரியவந்தது..
ஆனால், மாணவி ஆர்த்தி உடல் அழுகிய நிலையில் இருந்ததால் வெட்டுக்காயங்கள் உள்ளனவா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அவளது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பலாத்காரம் செய்ய முயன்றபோதே சிறுமி இறந்து விட்டதாகவும் அவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.
இது தொடர்பாக முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு விவேகானந்தனர் (57) , இன்னொருவர் 19 வயது கருணாஸ்.
இவர்கள் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.