மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
நான் படிக்கின்ற காலத்தில் பலமுறை பொன்னியில் செல்வன் படித்திருக்கிறேன். இக்கதையை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்றார். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர் , அவருக்கு வரலாற்று படம் சரிப்பட்டு வராது. ரொமான்டிக்கான நபர் அவர், எனவே இந்த படத்திற்கு மணிரத்னம் வேண்டாம் என்றேன்.
ஆனால் பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை மாற்றிவிட்டேன். வீட்டில் இருந்தே அவருக்கு சல்யூட் வைத்தேன். நாயகனுக்கு பிறகு மணிரத்தினத்தின் பிடித்தமான படம் பொன்னியின் செல்வன் தான்.
வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். எனது தொகுதிக்குட்பட்ட ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் எனக்கு ஒரு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.
டைரக்டர் மணிரத்தினம் முன்னிலையிலேயே அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு பேசியபோது அரங்கத்தில் உள்ள அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.