Skip to content

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். தஞ்சை மூத்த வழக்கறிஞர்கள் கோ.அன்பரசன், வெ.ஜீவகுமார்,  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகரச் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், முள்ளிவாய்க்கால் இலக்கியமுற்ற நிர்வாகி துரை.குபேந்திரன், மூத்த பொறியாளர் ஜோ.கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் ரயில் நிலையம் சீரமைக்கப்படும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலையம் முகப்பில் ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்பு இருந்தது. தற்போது சீரமைப்பு பணிகளால் பெரிய கோயில் வடிவமைப்பை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு மக்கள் இயக்கங்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில் தஞ்சைக்கு வந்த மத்திய ரயில்வே துறை அமைச்சரை மக்கள் இயக்க பிரதிநிதிகள் சந்தித்து பெரிய கோயில் எடுக்கப்பட்டது தொடர்பாக சுட்டி காட்டியுள்ளனர். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதான உரிமைகளை பறித்து வரும் நிலையில், பெரிய கோயில் வடிவமைப்பு எடுக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டுக்கு எதிரான சனாதான தாக்குதலாகவே உள்ளது.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், கட்டிடக்கலை, ஜனநாயக அமைப்பு முறைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற பெரிய கோவில்  வடிவமைப்பை முன்பிருந்தவாறு ரயில்வே நிலையம் முகப்பில் வைக்க வேண்டும்,  வடநாட்டு மந்திர் கோயில்  உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்          சின்னை.பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவர் ரா.அருணாச்சலம்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் முனைவர் ஜீவானந்தம்,  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் டி.தாமரைச்செல்வன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு.தியாகராஜன், ஆதித்தமிழர் பேரவை மூத்த தலைவர் எம்.பி நாத்திகன்,விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரெ.முகிலன்,  ரயில்வே பயணிகள் சங்க செயலாளர்      ஆர்.பி.முத்துக்குமரன், திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் எல்.வி.ரெங்கராஜ்,  தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் சுந்தர விமலநாதன், தமிழக விவசாயம் சங்க மாவட்ட தலைவர் ப.ஜெகதீசன், விளிம்பு நிலை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயச்சந்திரன் விசிறி சாமியார் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!