தமிழக சட்டசபையை வருகிற 23-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று உரிமைகுரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழக உரிமைக்குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்காரம் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலளார் சபரிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜாகீர்உசேன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் மற்றும் தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலுர், பெரம்பலூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த கார் மற்றம் வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
நவக்கிரக கோவில்களுக்கு அரசு பஸ் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இயக்கப்படுவதால் சுற்றுலா கார் மற்றும் வாகனங்கள் இயக்கும் 1000 டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பஸ்சேவையை நிறுத்த வேண்டும். இதனை கண்டித்து இந்த மாத இறுதியில் சுற்றுலா வாகனங்கள் சேவை நிறுத்தப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
மேக்ஸிகேப் உள்ளிட்ட வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்பட்ட வரி தற்போது ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறோம். எனவே முன்பு போல வரி வசூலிக்க வேண்டும். சுற்றுலா வாகனங்களில் இருக்கை பர்மிட் வெளி மாநிலங்களை போல வழங்க வேண்டும்.
சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வாடகைக்கு இயக்குவது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் கோரிக்கை கடந்த 4 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. எங்கள் கோரிக்கையை வருகிற 23-ந்தேதி நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது தீர்க்காவிட்டால் அன்றே சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.