திருச்சி ஏர்போட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் பிரவீன் குமார் , மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் தொழில் தொடர்பான வரவு செலவு கணக்குகள் எழுதப்பட்டிருந்தது.
அதில் திருச்சியில் உள்ள சில போலீசாரின் பெயர்களும் எழுதப்பட்டு, மாத சம்பளம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபற்றி செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கவனத்துக்கு சென்றது. எனவே விபசார புரோக்கர்களிடம் போலீசார் மாமுல் வாங்கியது உண்மைதானா என விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்படி விசாரணை நடத்தப்பட்டு கமிஷனரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் திருச்சி விபசார புரோக்கர்களிடம் விபசார தடுப்பு பிரிவு போலீசாரே மாதம்தோறும் மாமுல் பெற்றது உறுதியானது.இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட விபசாரத் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கீதா, சிறப்பு சப்இன்ஸ்பெடர் சகாதேவன், தனிப்படை ஏட்டுகள் பிரதீப், இளுஸ்டீன் ஆகிய 4 பேரையும் ஆயுதப்படைக்குமாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.
கமிஷனரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரிடம் மாமுல் பெறும்போலீசாருக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.