கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படைஅமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய கண்காணிப்பு மேற்கொண்டனர். இதில் மூன்று பெண் புரோக்கர், ஐந்து இளைஞர்கள் உட்பட எட்டு பேரை கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும், கரூர் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.பி சுந்தரவதனம் விசாரணையை தீவிர படுத்த உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய மூன்று பெண் புரோக்கர்கள், கார்த்தி (28), கார்த்திகேயன்(27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் கடந்த ஆறு மாத காலமாக சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 8 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர்.