மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிவில் இரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராகுல்காந்தி ராஜினாமா செய்தாக வேண்டி உள்ளது. இந்த இரண்டில் எதை அவர் ராஜினாமா செய்வார் எனவும், அதில் போட்டியிடப் போவது யார் என்பதும் பேசுபொருளாகி வருகிறது. இதற்கிடையே, தற்போது ராகுல் தனது வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், வயநாடு தொகுதியின் இடைத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கூறப்படுகிறது.
அந்த சஸ்பென்சுக்கும் நாளையுடன் (தேர்தல் முடிவு வெளியான 14 நாட்களுக்குள் இரண்டு தொகுதியில் வென்றவர், ஒரு தொகுதியின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்) முடிகிறது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நாளையுடன் (ஜூன் 18) 14 நாட்கள் முடிவதால், ராகுல்காந்தி தனது நிலைபாட்டை இன்றோ, நாளையோ அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.