Skip to content
Home » தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… 194 பேருக்கு பணியமர்வு ஆணை…

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர்திட்டம்) சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 194 நபர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா இன்று வழங்கினார்.

இம்முகாம் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி வேலை வாய்ப்பிற்காக நீண்ட காலம் பதிவு செய்து காத்திருப்பவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வாயிலாக மாதம் ஒருமுறை சிறிய அளவிலான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமும், அரையாண்டுக்கு ஒருமுறை பெரிய அளவிலான தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவிதொகை பெற பதிவு செய்தல், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சிகளை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள், மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக பல்வேறு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வங்கி கடனுதவி பெறுதல் தொடர்பான தகவல்கள், RSETI எனப்படும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளித்து தொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் 18 முதல் 35 வயது வரையிலான 5 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு பயின்றவர்கள், பொறியியல், ஐ.டி.ஐ, டிப்ளமோ முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் வேலைவாய்ப்புகள் பெறும் வகையில் இச்சிறப்பு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் ரேனே திருச்சி, எம்.ஆர்.எப் லயன், டி.வி.எஸ் நிறுவனம் உள்ளிட் 88 முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. மேலும் 1341 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டனர். இதில் 194 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 54 நபர்கள்

இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகியுள்ளனர். இதேபோன்று திறன் பயிற்சி நிறுவனம் சார்பில் 6 நிறுவனங்கள் பங்கேற்றது. அதில் 38 நபர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், முகாமில் கலந்துகொண்டு தனியார்த்துறையில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணியமர்வு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பியூட்டிசன், சமையல் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களும், இதேபோன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் இலவச போட்டித்தேர்வு பயிற்சிகளில் பயிற்சிப்பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிப்பெற்ற 03 நபர்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டது.

இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.இலக்குவன், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) திருச்சி மண்டலம் மு.சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார், தா.பழூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ம.மகாலெட்சுமி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் மு.கண்ணன், தா.பழூர் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.கதிர்வேல், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!