Skip to content
Home » தனியார் பள்ளி வாகன தணிக்கை…. கோவை கலெக்டர் நேரில் ஆய்வு.

தனியார் பள்ளி வாகன தணிக்கை…. கோவை கலெக்டர் நேரில் ஆய்வு.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் போக்குவரத்து துறையின் சார்பில் தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. இந்த தணிக்கையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டு கருவிகள், முதலுதவி பெட்டிகள், இருக்கைகள் வசதிகள், அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.
இவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையின் சார்பில் தீ விபத்தை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு தனியார் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு

மேற்கொள்ளப்பட்டதாகவும் இன்றைய தினம் கோவை மாநகருக்கு உட்பட்ட 203 பள்ளிகளை சேர்ந்த 1323 வாகனங்கள் தணிக்கை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த பேருந்துகளில் குறைபாடுகள் தென்பட்டால் அது சரி செய்யப்பட்ட பின்பே தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் இங்கு வந்துள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் ஓட்டுனர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்த தணிக்கைக்கு அனைத்து பள்ளிகளும் அவர்களது வாகனங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு வாகனத்திற்கும் இருக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார் போலவே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அதனை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் அவற்றை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பல்வேறு தனியார் பள்ளிகளில் பள்ளி வாகனங்கள் இல்லாமல் தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் அதனை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அதை மீறி பெற்றோர்கள் சொந்த விருப்பத்தில் தனியார் வாகனத்தில் அனுப்பினால் வாகனத்தில் உள்ள இருக்கையில் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் அனுப்ப வேண்டும் எனவும் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!