சென்னை துரைப்பாக்கம் பர்மா காலனி இரண்டாவது மெயின் ரோட்டில் பொருட்கள் டெலிவரி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (22) என்ற இளைஞர் பேக்கிங் பிரிவில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம் போல் பொருட்களை பேக்கிங் செய்து கொண்டிருந்த ஸ்ரீநாத் கீழ் தளத்தில் இருந்து பொருட்களை லிஃப்ட்டில் ஏற்றி மேல் தளத்திற்கு எடுத்துச் சென்றார்.

அப்பொழுது ஸ்ரீநாத் கையில் இருந்த பொருட்கள் தொடர்பான ரசீது கீழே விழுந்ததால் லிஃப்ட்டில் இருந்தவாறே அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் லிஃப்ட் திடீரென மேல் நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீநாத் தலை மேல் சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் ஸ்ரீநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீநாத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த துரைப்பாக்கம் போலீஸார் ஸ்ரீநாத் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் பரத், கிளை மேலாளர் சாரதி ராஜ் மற்றும் மணிராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஸ்ரீநாத் லிஃப்ட்டில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.