தமிழில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி இருந்தார். மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பிற்கு சிபிஎஃப்சி சான்றிதழ் பெற ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும், அதற்கா ஆதாரம் என்னிடம் உள்ளதாகவும் நடிகர் விஷால் மும்பை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு மீது குற்றஞ்சாட்டினார். கடைசி நேரத்தில் வேறு வழியில்லை என்பதால் இரண்டு தவணையாக ரூ.6.5 லட்சத்தை கொடுத்தோம் என்றும், அதன்பிறகு தான் மார்க் ஆண்டனி இந்தியில் வெளியானது என வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த விவகாரத்தை மகாராஷ்டிராவின் முதலமைச்சர் மற்றும் எனது பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். இனி எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இந்த நிலை வந்துவிடக்கூடாது எனவும் நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனையடுத்து இந்த விவாகாரம் தொடர்பாக
நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மார்க் ஆண்டனி’ ஹிந்தி பட வெளியீட்டிற்கு தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பான புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. இந்த நடவடிக்கை, தேசத்திற்கு சேவை செய்ய நேர்மையான பாதையில் செல்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்; என் பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு மிக்க நன்றி ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பது, என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வைத் தருகிறது, ஜெய் ஹிந்த். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.