பிரதமர் மோடி, நாளை காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி புறப்படுகிறார். 10.20 மணி திருச்சி வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக






கொள்ளிடக்கரையில் யாத்ரி நிவாஸ் எதிரே ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நடந்துவந்த ஹெலிபேட் அமைக்கும் பணி இன்று மாலை நிறைவடைந்தது. மேலும் ஹெலிபேட்டில் இருந்து ஸ்ரீரங்கம் கோவில் செல்லும் பாதை முழுவதிலும் புதியதாக தார்சாலை போடப்பட்டுள்ளது. இன்று மதியம் அந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர் இறக்கி ரிகர்சல் பார்க்கப்பட்டது. இதனை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.
காலை ஸ்ரீரங்கத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பிரதமர் மோடி கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் செல்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
சரியாக 11 மணி முதல் பகல் 12. 40 வரை அவர் அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்யும் பிரதமர் இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.ராமேஸ்வரத்தில் அன்று இரவு தங்கும் பிரதமர், அடுத்த நாள் காலை அக்னீ தீர்த்த கடலில் குளிக்கிறார். அங்கிருந்து புனித நீரையும் எடுத்து செல்கிறார். பின்னர் அரிச்சல் முனை சென்று கோதண்ட ராமர் கோவிலில், ராமர் பாதை என்ற புத்தகத்தையும் வெளியிடுகிறார்.இதனை தொடர்ந்து மதுரைக்கு சென்று அங்கிருந்து தனி விமானத்தில், மதியம் 12.30 மணியளவில் டில்லிக்கு புறப்படுகிறார். மறுநாள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திலும் பங்கேற்கிறார்.