உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 தளங்களுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய நபர்கள் மற்றும் மக்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அயோத்திக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி சரியாக மதியம் 12.10 மணிக்கு கோயில் கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கான பூஜைகளை தொடங்கினார். இந்த பூஜையில், பிரதமர் மோடியுடன், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையடுத்து, கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, சரியாக 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டது.
இதன்பின்னர், பால ராமருக்கு பிரதமர் மோடி, முதல் பூஜையை செய்து வழிபட்டார். பிரதமரை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ஸ்ரீ ராம பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது…. பல ஆண்டுகால காத்திருப்புகளுக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய காலச்சக்கரத்தின் துவக்கம். ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமரின்
ஆசீர்வாதத்தால் தான் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல் முனையில் நேற்று வழிப்பட்டேன். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்குமானவர். ராமர் நிரந்தரமானவர் மட்டுமல்ல நித்தியமானவர். பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். வளர்ச்சியடைந்துள்ள இந்தியா புதிய வரலாறு படைத்து வருகிறது. அயோத்தியில் தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்நாளை நினைத்து பார்ப்பார்கள். கோயில் கட்டுவதில் ஏற்பட்ட தாமத்திற்கு ராமரிடம் மன்னிப்புக் கோருகிறேன். ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டி நிலை இருக்காது. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் , சாதுக்களை வரவேற்கிறேன். ஒட்டுமொத்த தேசமே ராமர்கோயில் திறப்பை தீபாவளிபோன்று இன்று கொண்டாடுகிறது. ராமேஷ்வரம் அரிச்சல்முனையில் காலச்சக்கரம் மாறியது. நானும் அங்கு அதனை உணர்ந்தேன். யாரையும் வீழ்த்தவில்லை. கண்ணியமாக கிடைத்த வெற்றி. ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு இருகரம்கூப்பி நன்றி. ராம் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல்ல. சக்தியை கொடுக்கும் ஆற்றல்…
இன்றும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு விட்டது. ராமர், அனுமனை வௌியே தேடாமல், நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். வலிமையான நாட்டை உருவாக்க வேண்டும். ராமர் கோயிலை நிர்மானிக்க வேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருந்தது. இவ்வாறு பேசினார்.