ம.ஜ.த., தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33) மீதான ஆபாச வீடியோ வழக்கை மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் வரும் மே 31ம் தேதி, சிறப்பு புலனாய்வு குழு முன்பு, விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரஜ்வல் ரேவண்ணா பேசியதாவது: நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பொதுமேடைகளில் ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதால், நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு எதிராக அரசியல் சதி நடந்ததால், நான் என்னை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது. வரும் மே 31ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு முன்பு, விசாரணைக்கு நேரில் ஆஜராவேன். என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். எனது வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்தது. ஏப்ரல் 26ம் தேதி நான் இந்தியாவில் இருந்து புறப்பட்ட போது என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நான் வெளிநாடு சென்று 3 நாட்களுக்கு பிறகு தான் இது குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. எனது வழக்கறிஞர் மூலம் ஏழு நாட்கள் அவகாசம் கேட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.