Skip to content

பாலியல் வழக்கு பிரிஜ் பூஷனுக்கான இடம் சிறைதான்… மகளிர் ஆணைய தலைவி ட்வீட்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தெரிவித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 2 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு எப்.ஐ.ஆர். போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், புகார் தெரிவித்த மைனர் பெண்ணின் தந்தை தனது வாக்குமூலத்தை மாற்றியதால், பிரிஜ் பூஷண் மீது போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய டில்லி காவல்துறை பரிந்துரைத்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் டில்லி போலீஸ் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில்,டில்லி விமான நிலையத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலின் நிருபருக்கு பிரிஜ் பூஷண் பேட்டி அளித்தார்.

அந்த பெண் நிருபர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மற்றும் டில்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தொடர்பாக கேள்வி கேட்டபோது, கோபமடைந்து பிரிஜ் பூஷண், “நான் உங்களிடம் எதுவும் சொல்லமுடியாது” என்று பதிலளித்து அங்கிருந்து விலகிச் சென்றார். அவரது பதிலில் அதிருப்தி அடையாத பெண் செய்தியாளர் சிங்கைத் துரத்திச் சென்று, அவரை பா.ஜ.க. இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் மேலும் எரிச்சலடைந்த பிரிஜ் பூஷண், “உங்களுக்கு வேண்டிய மசாலா பேச்சு எதுவும் என்னிடம் இல்லை” என்று காட்டமாக பதிலளித்தார்.

நிருபர் தொடர்ந்து சென்று நீங்கள்  ராஜினாமா செய்வீர்களா என்று கேட்டபோது, “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்?” என்று கேட்டார். கோபத்தில் குரலை உயர்த்தி, “எதன் அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறாய். வாயை மூடு” என்று அதட்டினார். பின், அவர் விரைந்து சென்று தனது காரின் உள்ளே சென்று அமர்ந்துகொண்டு, கதவை வேகமாக அடைத்து செய்தியாளரின் மைக்கை உடைத்துப் போட்டார். மைக் தரையில் விழுந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தின் முழு வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதைப் பார்த்து, பிரிஜ் பூஷணுக்கு உடனடியாக சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். “இதை மீண்டும் சொல்கிறேன். பிரிஜ் பூஷண் சிங் ஒரு ரவுடி. ஒரு பெண் செய்தியாளரிடம் கேமரா முன்பே இப்படி நடந்துகொள்ளும் தைரியம் அவருக்கு இருக்கும்போது, கேமரா வெளிச்சம் இல்லாத பெண்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள்! இந்த ஆளுக்கான இடம் நாடாளுமன்றம் அல்ல, சிறையில்தான்!” என்று மாலிவால் டுவீட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!