கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணராமன் (55). இவரது மனைவி கோமதி மீனாட்சி (47). இவர்களுக்கு வேம்பு வினோதினி (27) என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி கோமதி மீனாட்சி மாவு அரைத்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், கல்யாணராமன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் அவரை தேடி அலைந்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தனது மனைவி காணாமல் போனது குறித்து புகார் மனு அளித்துள்ளார். மேலும், தனது மனைவியின் புகைப்படத்துடன் காணாமல் போனது குறித்த விவரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், கரூர் சர்ச் கார்னர் பகுதியில் கோவையில் காணாமல் போன கோமதி மீனாட்சி சாலையில் அங்குமிங்கும் நடந்து சென்றுள்ளார்.
அதனை சர்ச் கார்னர் பகுதியில் சாலை ஓரத்தில் செருப்பு கடை நடத்தி வரும் கரூர், நீலிமேடு பகுதியை சேர்ந்த கலீல் ரகுமான் – பாத்திமா தம்பதியினர் பார்த்து சந்தேகம் அடைந்து, அவரை அழைத்து விசாரித்ததில், கோவையில்
இருந்து கரூர் வந்தது குறித்து முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளார்.
அவரை அழைத்து சாப்பிட உணவு வாங்கி கொடுத்து பேச்சு கொடுத்து, விசாரித்ததில் கோமதி மீனாட்சியிடம் அவரது கணவர் கல்யாணராமன் செல்போன் எண்ணை பெற்று, போன் செய்து கொடுத்துள்ளார்.
செல்போனில் தான் கரூரில் செருப்பு கடை ஒன்றில் பத்திரமாக இருப்பதாக கோமதி மீனாட்சி தெரிவித்ததை அடுத்து கல்யாணராமன் வீடியோ கால் மூலமாக பேசியுள்ளார் இதனை தொடர்ந்து கோவையில் இருந்து, தனது நண்பர் உதவியுடன் கார் மூலமாக கரூர் வந்தார்.
அங்கு வந்த கல்யாணராமன் மனைவி கோமதி மீனாட்சியை கண்டதும் மகிழ்ச்சி அடைந்ததுடன், உதவி புரிந்த இஸ்லாமிய தம்பதிகளுக்கு மனம் உருகி நன்றி தெரிவித்ததுடன், மனைவியை அழைத்துக்கொண்டு கோவை சென்றார். கோவையில் காணாமல் போன கோவில் பூசாரியின் மனைவி கரூரில் மீட்கப்பட்டதும், இஸ்லாமிய தம்பதியர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்த நிகழ்வு இந்து – முஸ்லிம் ஒற்றுமையை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது.